காதல் மொழி
நான் ஆசையுடன்
வளர்க்கும் பூச்செடியிடம்
பூ ஒன்று கேட்கிறேன்.
தருவதாய் பதிலுரைத்த
செடியில் இன்று பூத்திருக்க
பூ தரும்படி பணிக்கிறேன்.
நான் நேசிக்கும் ஒருத்தி
பூ கேட்டிருக்கிறாள்
என்றது செடி.
பெண்ணிற்கு முதலிடமென
நான் விலகலானேன்.
யாரிடம் காதலைச் சொல்ல
செடியிடம்
பூ கேட்டேனோ அவளே
அந்தப் பூவைத் தலையில்
சூடிப் போகிறாள்.
அவள் சூடிப் போகும் காதல்
என்னுடையதா...?
செடியினுடையதா...?
வாசப் பூவின்
காதல் மொழியறிந்த
உங்களில் யாரேனும் ஒருவர்
ஒளிவுமறைவின்றி
அதை என்னிடத்தில்
கேட்டுச் சொல்லுங்கள்...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.