ஆசையே விலகிப்போ
அடுத்தவீட்டு வசதிகளைப் பார்த்து பார்த்தே
அதுபோல தான்வாழ வேண்டு மென்று
கடுகடுத்து மனைவியவள் தொல்லை தந்து
கணவனையே சொல்லம்பால் குத்து கின்றாள் !
அடுத்தவீட்டு ஆண்மகனோ நேர்மை யின்றி
அதர்மத்தால் பெற்றதந்த வசதி யென்றே
எடுத்துரைத்த கணவனையே எடுத்தெ றிந்தே
ஏளனமாய்த் தீநாக்கால் ஏசு கின்றாள் !
உண்ணுகின்ற உணவுக்கு வறுமை யில்லை
உடல்மறைக்கும் உடைகளுக்கும் பஞ்ச மில்லை
கண்மறைய வாழ்வதற்குச் சொந்த மாகக்
கட்டியுள்ள சிறியவீடும் உள்ள திங்கே
பண்பாக நடுத்தரத்துக் குடும்ப மாகப்
பழியேதும் இல்லாமல் வாழு கின்றோம்
எண்ணத்தில் ஆசையினை வளர்த்துக் கொண்டால்
எண்ணற்ற இன்னல்தான் அறிவாய் என்றான் !
பகட்டாக நாம்வாழ வேண்டு மென்றால்
பகற்கொள்ளை குறுக்குவழி செல்ல வேண்டும்
அகந்தன்னில் இரக்கத்தை அன்பு தன்னை
அகற்றிநஞ்சாய் மனந்தன்னை மாற்ற வேண்டும்
முகம்பார்த்து பேசியவர் தூற்றி நம்மின்
முதுகின்பின் கைகொட்டிச் சிரிப்பர் என்றான்
தகவுடைய இவ்வாழ்வே போதும் ஆசை
தவறென்றாள் ! உணர்ந்தவளை அணைத்தான் போற்றி !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.