இமயம் உயரமல்ல...
அன்பைப் பொழியும் அட்சய பாத்திரம்
கருணை வாழ்வின் கற்பக விருட்சம்
ஆரழுதாய் உருவான நித்திலம்
ஆக்கத்திற்கு அடித்தளமிடும் அன்பரசி தன்
இன்பத்தை மட்டும் உணராத இல்லத்தரசி
ஈகை குணம் படைத்த எழிலரசி
உள்ளொன்று வைத்து புறம் பேசாத உத்தமியாய்
ஏணியாய் எளிமையின் சின்னமாய்
எழில் பெற்ற சோலையாய்
ஏக்கங்களைத் தேக்கங்களாக்கி
ஏணியாய் பிறர் நலம் விரும்பியே...
ஐயம் களையும்அமுதமாய்
ஔவை சொன்ன தையலாய்
ஓங்கு புகழ் பெற்ற சிகரமாய்
ஔசதமின்றி வாழ வழி வழிகாட்டும் மருத்துவராய்
மண்ணுக்குள் மறைந்து இருக்கும்
வேர் போல ஒவ்வொரு ஆணின்
வெற்றிக்குப் பின்னால் மறைந்திருக்கும்
மனையறத்தின் வேரே...
மாசில்லா வீணையே
ஆசிரியராய் எழுத்தாளராய் வீரமங்கையாய்
கருவாகி உயிராகி உணர்வாய் தாயாய்
தோழியாய் பன்முகம் கொண்ட
பராசக்தியே அகிலமும் நீதான்...
உனக்கான சிறகை நீயே விரி
வெற்றியின் முகவரி விருதுகளாய்
உன்னை வந்தடையும்...
இமயம் உயரமுமல்ல
இருக்கும் எவையும்
துயரமும் அல்ல...
- முனைவர் ப. விக்னேஸ்வரி, திருமலையம்பாளையம், கோயமுத்தூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.