அந்த ஒற்றைச் சொல்
என் ஒற்றைச் சொல்லை
ஒருவர் தலைமேல்
சுமையாய்ச் சுமந்து செல்லலாம்
அடுத்தவர் அதைத்
தோளில் தூக்கி நடக்கலாம்
இன்னொருவர்
குழந்தையாய்ப் பாவித்து
இடுப்பில் சுமந்து திரியலாம்
வேறொருவர்
நடைக்குத் துணையாய்
ஊன்றுகோலென
அதை உடனெடுத்துச் செல்லலாம்
அடுத்தொருவர் பேச்சுத் துணை
நண்பனாகப் பாவிக்கலாம்
உங்களில் யாரேனும் ஒருவர்
அதைக் காலால்
மிதித்துச் செல்லலாம்
பிறர் சொற்களை
பத்திரமாக நெஞ்சில் சுமக்கும்
எனக்குக் கவலை யாதெனில்
ஆத்மார்த்தமான
அந்த ஒற்றைச் சொல்
உங்கள் நெஞ்சை
வருடிக் கொடுக்கத் தவறிவிடுமோ
என்ற அச்சம் பீடிக்கிறது
என்னில்...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.