பயண நினைவுகள்
ஏறிப்போன எரிபொருள்...
எண்ணத்தை எங்கெங்கோ
அழைத்துப்போனது!
கழுதை குதிரை
மாடு ஒட்டகம் யானை குதிரையென...
தூக்கிச் சுமக்கவும்
தூரதேசம் அழைத்துப் போகவும்!
முன்பெல்லாம்...
எரிபொருள் இல்லாப் பயணம்தானே!
ஏதேதோ மலைப்பாதை
ஏதேதோ காட்டுப்பாதை
ஏதோ ஊர்ப்பாதை...
வண்டியோ தேரோ...
நிறுத்தி அவிழ்த்து விட்டால்
நிரப்பிக் கொள்ளாதோ...
அதனதன்
வயிறு...
ஆசையாய் அவை அசை போட
காசைக் கேட்டிருக்க
வாய்ப்பேயில்லை!
எரிபொருள் மிச்சம் மட்டுமல்ல
எதிர்வரும் வாகனம்
கண்எரிய கூச...
முந்திப்போக வாகனம்
பின்னாலிருந்து ஒலியெழுப்ப...
உயிரை கையில் பிடித்தபடிதானே
பயணம்!
அப்பப்பா தொல்லையில்லாத
அந்தப்பயணம் ...
கண்ணுக்குள் வந்து
எண்ணங்கள் அசைபோடுது
ஆசையாய்!
- க. மகேந்திரன், தூத்துக்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.