அந்த அழுக்கு ஆடை மட்டும்
ஆசையாய் அவன் அதிகாரம்
எல்லாத்திசையிலும் கேட்டபடி...
இசையில்லாமல் அவன் சங்கீதம்...
மேடை எதிர்பாராமல்
நடை மேடையில்...
சில நேரம் ஆத்திரம்
சிலநேரம் அவசரம்
யாரிடமோ அன்பாய் பேசுவது
அழுவது...
வம்பாய்ப் போகுமென
பார்வையை அழுத்தி
நகர்ந்தே போகிறோம்!
ஏதேதோ அதிர்வலைகள்
உதவியேயிருக்கிறதோ
யார்யாரையோ தொடர்பில் இணைத்து...
அந்த அழுக்கு மனிதனுக்கு!
எப்போதாவது...
புத்தாடை அவனை அணிய வைக்க
ஆசையெனக்கு!
அலைக்கற்றைகள் 2 3 4 5...என
அழைத்துப்போன நவீனத்தில்...
அதே அதிகாரம்
அதே சங்கீதம்
அதே ஆத்திரம்
அதே அவசரம்...
யாரிடமோ அன்பாய்ப் பேசுவது, அழுவது...
அத்தனையும் காண்கிறேன்...
அந்த அழுக்கு ஆடை மட்டுமில்லை!
- க. மகேந்திரன், தூத்துக்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.