பொன்னாடை
யாரோ விலை கொடுத்து வாங்க
யார் யாரையோ கவுரவப்படுத்தி...
விலையில்லாமல்
பயணிக்கிறது பொன்னாடையென
பெருமையாய்ச் சொல்லும்
பட்டாய்
பகட்டாய் தெரியும் நூலாடை!
படையென திரண்டு
போர்த்தும் பொன்னாடையெல்லாம்...
கடையிலிருந்து வாங்கப்படவில்லை...
யாரோ கையிருப்பில் ...
போர்த்தியதைப் பத்திரப்படுத்திக்
கைமாற்றி விடுவதாகவேத் தெரிகிறது!
விலையில்லாமல்
பயணித்த பொன்னாடை...
வேட்பாளரின்
தேர்தல் செலவுக் கணக்கில் மட்டுமே
விலையாகிப் போகிறது!
மீண்டும் மீண்டும்!
பத்திரப்படுத்திக் கெளரவித்த
கதை சொல்லும் பொன்னாடைகள் மட்டும்
பயணிப்பதேயில்லை!
பயன்படுத்தும்படி போர்த்திய நூலாடை போல்!
- க. மகேந்திரன், தூத்துக்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.