பட்டாம் பூச்சி மொழி
மூழ்கித் தேன் குடிக்க அனுமதித்த பூக்களுக்கு
பட்டாம் பூச்சிகளின் உமிழ் தொட்ட மொழிகள்
பின்னர்தான் எச்சில் எனத் தத்துவமாய் தெரிகிறது.
சூல்தரி மகரந்தங்கள் இயற்கையின் தேடல் கோட்பாட்டில்
மீள் தேன் சுரந்து இந்தப் பட்டாம்பூச்சிதான் என்னைத் தீண்டும் என
எங்கும் காத்து இருப்பதில்லை! காதலும் அப்படித்தான்.
பட்டாம் பூச்சி மொழியில் காதல் செய்யுங்கள்.
எச்சிலுக்கு அச்சப்படா மானுடம் கொண்ட மொழியில்
வகுத்துக் கொண்ட விதிகளுக்கு வேலை இல்லை.
கட்(டி)டங்களில் தேடாமல் நந்தவனங்களில் நடங்கள்.
பட்டாம் பூச்சிகளின் எச்சில் மொழி தேனாய்ச் தெரிக்கும் .
பட்டாம்பூச்சிக்கும் காதலுக்கும் நேரம் காலம் இல்லை.
மீறி மீண்டு உணர்ந்து... எதுவும் இல்லாமல் போய்
மீண்டும் பட்டாம் பூச்சியாய் பறப்பது... காதல்...!
ஒரே மலர்... ஒரே பட்டாம் பூச்சி! எப்படி?
வாய்ப்பில்லாத வாழ்கையில்
எனக்கு மட்டுமே தெரிந்த அந்த புழுங்கிப் புதைந்து போன
கம்பிளிப் பூச்சி மொழியில்
என் ஆசாபாச பொழுதுபோக்காய் போக்கிடம் நீ...!
நான் உன்னிடம் சொன்ன ரகசியப் பொய்... நேசம்.
இல்லாத கற்பில்... இங்கே காதல்.
எச்சில் படுத்தப்பட்டு கரைந்து கறையாய் போகிறது.
ஆக காதலுக்கும் கற்பில்லை.
எந்தக் காதலிலும் உண்மை இல்லை.
பட்டாம் பூச்சி மொழிகளைக் கவனியுங்கள்.
இனியாவது நேர்மையான நேசம் வரலாம்...!
சத்தியமாய் அதையும் காதல் என்று சொல்லி விடாதீர்கள்.
- அருணா.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.