ஆகப்போவது ஒன்றுமில்லை
நான்
சொல்லவரும் கடை
வெகுநாட்களாய் மட்டுமல்ல
பல வருடங்களாய்
அந்தத் திருப்பத்தில் தான்
இருந்தது.
அந்தக் கடைக்காரர்
எனக்கு மிகவும்
பரீட்சயமானவர்
நல்ல அபிமானியும் கூட.
அவர் பழகும்
நேர்த்திக்காகவே
அந்தக் கடைக்கு நான்
அடிக்கடி போய்வருவதுண்டு.
அது என்ன கடை என்று
நீங்கள் கேட்பது
என் காதில் விழாமலில்லை.
அதை
நான் உங்களிடம்
சொல்லும் பட்சத்தில்
என்னைப் பற்றியும்
அந்தக் கடைக்காரரைப் பற்றியும்
அந்தக் கடையைப் பற்றியும்
நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
தற்போது
அந்தக் கடையுமில்லை
கடைக்காரருமில்லை.
அதை பற்றி
நீங்கள் தெரிந்து கொண்டு
அதனால்
ஆகப்போவது ஒன்றுமில்லை.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.