உலகம் நம் கையில்
முன்னோர்கள் தூய்மையாக வைத்தி ருந்த
மூச்சிழுக்கும் காற்றினிலே நஞ்சை சேர்த்தோம்
முன்நின்று காற்றிலுள்ள அசுத்தம் நீக்கும்
முதலுதவி மரங்களினை வெட்டிச் சாய்த்தோம்
பொன்கதிரை வடிகட்டி ஒளிய னுப்பும்
பொற்கவச ஓசோனை ஓட்டை செய்தோம்
கன்னக்கோல் வைப்பதுபோல் குழாயை வைத்தே
காலிசெய்தோம் பூமித்தாய் வயிற்று நீரை!
தாய்மண்ணில் செயற்கையுரம் போட்டுப் போட்டுத்
தரும்விளைச்சல் எனஉறிஞ்சி சக்கை செய்தோம்
பாய்மரங்கள் போய்வந்த கடலை வானைப்
பங்குபோட்டு சண்டையிட்டுப் பகைமை யானோம்
ஆய்ந்தறிந்த அறிவியலால் குண்டு செய்தே
அடுத்தவரை அழிப்பதற்கே முனைந்து நின்றோம்
நேய்களுக்குப் புதுமருந்தைக் கண்ட ளித்து
நோய்புதிதாய்த் தோன்றுதற்கே வழிய மைத்தோம் !
விளைவித்த விஞ்ஞான கணினி யாலே
வீட்டிற்குள் உலகத்தை அடைத்து வைத்துக்
களையாகத் தன்னலத்தை வளர்த்துக் கொண்டு
கருணையன்பு மனிதத்தைத் துரத்தி விட்டோம்
தளையுடைத்தே வளங்களினைப் பொதுமை செய்து
தகர்த்திட்ட இயற்கையினைத் தழைக்கச் செய்வோம்
திளைத்திடுவோம் ஒற்றுமையில்! பகைமை யின்றித்
திருத்திடுவோம் உலகம்நம் கையில் தானே!
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.