உழைப்பு
எழுகதிரைப் பார்க்காமல் உறங்கு கின்ற
எவருமிங்கே புதுச்சுவட்டைப் பதித்த தில்லை
தழுவாத புதுச்சிந்தை மாந்த ரென்றும்
தரைமாற்றும் புதுப்பாதை அமைத்த தில்லை
உழுதுமண்ணைப் பண்படுத்தா நிலத்தி லென்றும்
உயிர்ப்புடனே பசும்பயிர்கள் வளர்ந்த தில்லை
எழுச்சியுடன் முயலாதோன் ஞாலம் தன்னில்
எந்தவொரு சாதனையும் படைத்த தில்லை !
நடக்காதான் கால்களிலே சிலந்தி கூட
நாக்காலே வலைதன்னைப் பின்னப் பார்க்கும்
முடங்கிமூலை சோம்பலிலே மூழ்கி ருந்தால்
முதுகேறி எறும்புகூட எள்ளல் செய்யும்
அடக்கமின்றிச் சினம்கொண்டோன் செயல்கள் என்றும்
ஆக்கத்தைத் தாராமல் அழிவே செய்யும்
இடமறிந்து காலத்தே முயலா தோனின்
இடம்தேடித் தோல்விகளே முகத்தைக் காட்டும் !
தடைகண்டு துவளாமல் தடையு டைக்கும்
தகுவுறுதி கொண்டோன்தான் முன்னே செல்வான்
விடைகாண முயல்வோன்தான் புதிர விழ்த்து
வியக்கின்ற விளக்கத்தை எடுத்து ரைப்பான்
உடைமையென முயற்சிதனைக் கொண்ட வன்தான்
ஊழ்தனையே பின்தள்ளி வெற்றி காண்பான்
படையெனவே நம்பிக்கை நெஞ்சில் கொண்டு
பகலிரவு உழைப்பவன்தான் எதையும் வெல்வான் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.