போராடு...!
உங்களுக்கு
எல்லாம் தேவை என்கிறீர்கள்.
அதற்காக
நீங்கள் என்ன செய்தீர்கள்?
அழுகிற பிள்ளைதான்
பால் குடிக்கும்.
ஜடமாய் இருந்து
வெந்ததைத் தின்று
விதி வந்ததும் மாண்டுப் போவதில்
பிறவிப் பயன் எங்ஙனம் கிடைக்கப் பெறுவாய்?
எதற்கும் முயற்சிகள் வேண்டும்.
கூடாததற்கெல்லாம்
கூடிக் களிக்கிறோம்.
கூடுவதற்கு ஏனோக் கூடாமலிருக்கிறோம்.
நாளை நமக்கெல்லாம் சோறு கிடைக்கவும்
காவிரியில் உரிமை கோரியும்
மீத்தேன் திட்டத்திலிருந்து நிலங்களை மீட்கவும்
ஸ்டெர்லைட் ஆலையைத் தடுக்கவும்
விவசாயிகள் போராடுகிறார்கள்.
ஆதரித்து குரலெழுப்புவது
நம் கட்டாயக் கடமையல்லவா?
ஈழத்தமிழனின் ஈனக் குரலுக்கு
செவிசாய்த்திட வேண்டாமா?
போடா போ நம் சந்ததிகளை வாழ வைக்க
நீயும் களத்திலிறங்கு
போராடு உன்னால் முடியும்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.