உன்னை நீ தெளி
உன்னைநீ தெரிந்துகொண்டால்
உள்ளத்தில் தெளிவமையும்
உன்னைநீ புரிந்துகொண்டால்
உலகத்தில் வழியமையும் !
பிறராலே உயர்ந்திட்டோம்
பின்னடைந்தோம் என்கின்ற
வறண்டமன வாட்டங்கள்
வருகின்ற நிலைமாயும் !
ஆசைக்கு அணையிட்டே
ஆக்கத்தில் வினையாற்றின்
பூசைக்கு மலர்குவியும்
உயர்வெற்றி தலைபாயும் !
மெய்யிற்குத் துணைநின்று
நேர்மைக்குக் கைகொடுத்து
பொய்யிற்குத் திரையானால்
புகழுந்தன் கால்சாயும் !
ஈனத்தில் மயங்காது
இருள்தன்னில் நுழையாது
மானத்தின் உள்ளிருந்தால்
மதிப்புன்னைத் தேடிவரும் !
அறிஞர்கள் கூட்டத்தில்
அனைவருமே புகழ்பாடும்
குறியாக நீயிருந்தால்
குன்றத்து விளக்காவாய் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.