நிறம்
உலக அதிசயமாய்
ஏழு வண்ணங்களில்
ஜகம் முழுதும்
தந்திரம் செய்து
ஆக்கிரமிப்பு செய்தாலும்
அந்த வானவில்
கொடியில் காயும்
உன் வண்ணத் தாவணியிடம்
தோற்றுத்தான் போகிறது
எந்த நிறத்துடனும்
கருப்பு நிறத்தைச் சேர்த்தால்
கருப்புதான் ஆகும்.
நீ, நான் மட்டும் எப்படி
கருப்பு, வெள்ளையாய்
சுயம் மாறாமல்
இணைந்திருக்கிறோம்
நம் காதலின் அடையாளமாகத்தான்
எல்லா மனித குலத்தின்
கரு விழியும்
கருப்பு, வெள்ளையாய் உள்ளதோ என்னமோ?
நிறங்களுக்கு அப்பாற்பட்டது
நம் காதல்
நிஜம் கடந்தும்
கனவுலகில்
ஒவ்வொரு நொடியும்
அணு, அணுவாய்
உன்னை உயிர் உருகும்படி
காதலித்துக் கொண்டிருக்கிறேன்.
மறு ஜென்மத்தில்
எனக்கு நம்பிக்கையில்லை - இருந்தாலும்
இறந்த பின்
ஒரு முறையாவது
என் கல்லறை வந்து
இன்னும் காதலிப்பதாய்
வந்து சொல்
இன்னும் என்னுள் ஒலித்துக் கொண்டிருக்கும்
உன் குரல் கேட்டாவது
மீண்டும் பிறப்பேன்
உன்னை அணு, அணுவாய்க் காதலிக்க !!
- நௌஷாத்கான். லி, சோழபுரம், கும்பகோணம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.