சோழி போட்ட கிழவி

சோழி போட்டுப் பார்க்கும்
கிழவியிடம்
வருங்கால
நம் காதல் வாழ்க்கை பற்றிக் கேட்டேன்
நீரின் பெருவடிவம்
ஆழி
ஆழி இல்லையேல்
ஓடும் நதிகளுக்கு
போக்கிடம் ஏது??
நீரின்றி மட்டுமல்ல
நீயின்றியும்
என் எதிர்காலம் இல்லையடி ?!
சிவனில்லையேல் சக்தியேது ?
சக்தியில்லையேல் சிவனேது ?
நீயின்றியும் நானில்லை என்றாள் !
மொத்தத்தில்
என்னுள் நீயே ஆக்கிரமித்திருக்கிறாய்
செல்லங்கள் கொஞ்சவும்,
சண்டைகள் போடவும்
உன்னை விட்டால்
நாதியற்ற அநாதையடி
ஒரு சொல் சொன்னால் கூட
உனக்காக
செத்துப் போவேன் - ஆனால்
இப்பிரபஞ்சத்தில் வாழும்
ஒவ்வொரு நொடியும்
உனக்காகவே
அணு அணுவாய் வாழ்ந்து
இரசிக்க வேண்டும் .
எல்லா நீர் வடிவங்களும்
ஆழியில் அடங்குவது போல
உன் பெரும் சுழியில்
நானடங்கி
மரணம் வரை
தொடர வேண்டும்.
என்ன இந்த வாழ்க்கை
இவ்வளவு சீக்கிரத்தில்
முடிந்து விட்டதே என
உன்னால் நானுணர வேண்டும்
என் பெருங்கடலே
பெண்மையின் சொரூபமே
என் வன்மையில்
உன் மென்மை உணர வேண்டும்
உன் மென்மையில்
என் வன்மை நீயுணர வேண்டும்
நம் பரிமாற்றங்கள்
தாய்மை வரத்தை
உனக்குப் பரிசாய்த் தருமடி
உங்கள் அன்பைச் சொல்லிக் கொண்டே இருந்தால்
எனக்கும் இளமை வரும்
இந்தப் பொல்லாத காதலும் துளிர்க்குமென
சோழி போட்ட கிழவி
சிரித்துக் கொண்டும்,
சிணுங்கி கொண்டும்
நடையைக் கட்டினாள் .
- நௌஷாத்கான். லி, சோழபுரம், கும்பகோணம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.