அன்பும் மனிதனும்
ஒருகாகம் இறந்துவிட்டால் கூடு கின்ற
ஒப்பற்ற காக்கையன்பைக் கண்ட பின்னும்
பெருங்களிற்றைக் கொல்வதுவா மனித அன்பு
பெருமையுடை வள்ளலாரை தெரசா வைப்போல்
அரும்உயிர்கள் அனைத்தின்மேல் காட்டு தல்தாம்
அழுக்கில்லா மழைபோன்ற தூய அன்பாம்
உருவத்தை மனிதனென அழைப்ப தற்கே
உள்ளத்தில் அன்பிருக்க வேண்டும் நன்றாய் !
அடிபட்டுச் சாலையிலே விழுந்தி ருக்கும்
அவலமான காட்சிதனைப் பார்த்த வாறு
கடினமான மனத்துடனே கடந்தி டாமல்
கருணையன்பில் அவர்க்குதவி செய்யும் போதே
துடிக்கின்ற அவருயிரும் உடலில் நிற்கும்
துயரத்தில் மூழ்காமல் குடும்பம் வாழும்
நடிக்கின்ற மனிதர்க்கே எடுத்துக் காட்டாய்
நாம்முதலில் செய்திடுவோம் தொடர்வர் வந்தே !
நடைபாதை தனிலெந்தக் காப்பு மின்றி
நலிந்தோர்கள் வாழ்கின்ற காட்சி கண்டும்
விடையின்றி அவர்வாழும் அவலம் கண்டும்
வினாவெழுப்பி மாற்றுதற்கு முயன்றி டாமல்
நடைபோட்டுக் கடப்பதுவா மனித அன்பு
நன்றாக அவர்வாழ வழியைச் செய்து
குடையாக நாமிருந்தால் பிடிப்ப தற்குக்
குடையோடு வருவார்கள் பார்ப்போ ரெல்லாம் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.