பரிகாரம் யாதொன்றும் இல்லை
பெற்றெடுத்த பெற்றோரை விடுதி விட்டுப்
பெருந்துயரில் அவர்களினைத் தவிக்க வைக்கும்
கற்றுபெரும் பதவிபெற்ற புதல்வர் கட்கும்
கணவரினை மாற்றுகின்ற மனைவி யர்க்கும்
உற்றதொரு பரிகாரம் உலகி லுண்டோ
உளம்நொந்து அவர்பாடம் கற்ப தற்குப்
பெற்றபிள்ளை அத்தவற்றை செய்யும் போதே
பெற்றமனச் சோகத்தை அறிவர் நன்றாய் !
தன்மகனின் மன்றலுக்குப் பெண்ணைப் பார்க்கத்
தமரோடு செல்கின்ற பெற்ற வர்கள்
பொன்பொருளைக் கேட்டவரை வதைப்ப தற்கும்
பொருமலுக்கும் பரிகாரம் ஏது முண்டோ
தன்மகளைப் பெண்பார்க்க வருப வர்கள்
தரவேண்டும் எனக்கேட்கும் தட்ச ணையின்
புன்செயலே பாடத்தைக் கற்கச் செய்யும்
புரையோடிப் போனயிந்தக் கொடுமை நீக்கும் !
தேன்பேச்சால் மனங்களினை மயக்கு வார்கள்
தெளிவாக வாக்குறுதி கொட்டு வார்கள்
ஊன்உயிரைத் தருவதாகச் சொல்லு வார்கள்
ஊராளும் ஆட்சிதனைப் பெற்ற பின்போ
மான்வேட்டை ஆடுகின்ற புலிக ளாகி
மக்கள்தம் வரிப்பணத்தைச் சுருட்டு வோரைக்
கூன்நிமிர்ந்து குற்றுயிராய் ஆக்க லொன்றே
கூறுகின்ற பரிகாரம் வேறு இல்லை !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.