ஓய்வறை
நேரங்காலம் பார்க்காமல்
வீட்டை அடகு வைத்த பணத்தில்
அவசர அவசரமாய்
அப்பா எழுப்பிய அறை!
பெண்களை அனுமதிக்க மறுக்கும்
காலங் காலமானத்
தீண்டாமைகளுக்கு இடையே
அம்மாவிற்கும் அக்காவிற்கும்
அங்கு முதல் மரியாதை!
சென்று வர ஏதுவாகப் பதிப்பித்த
பளிங்குக் கற்களின் செம்மை அழகு!
ஆணாதிக்கப் பேர்வழிகளின்
அனுமதி மறுக்க
இடைவெளி காணாத்
துளைகள் அனைத்தும் அடைப்பு.
அவசரமான தேவைகளுக்குப்
பஞ்சம் ஏதும் நேராமல்
ஐந்தாறு ஆழ்துளைக் கிணறுகளும்
அதன் அருகில் அமைப்பு!
இனிக் காட்டு வெளிகளில்
சந்து இடுக்குகளில்
மூலை முடுக்குகளில்
திறந்த வெளியில்
என்கிற கவலை இனி இல்லை!
பல்லாண்டு காலமாய்
எங்கள் வீட்டுப்
பெண்கள் காண விரும்பிய
அறையைக் கட்டிவிட்டோம்!
ஆனந்தக் கண்ணீரில் கலக்கத் தொடங்கினோம்!
அதற்கு ‘ஓய்வறை’
என்று பெயர் சூட்டி மகிழ்ந்தோம்!
- ஜெ. கார்த்திக், திருச்சிராப்பள்ளி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.