எல்லாமே வசந்தம் தான்
மொட்டைமரம் துளிர்ப்பதுவும் கிளைசி ரிக்க
மொட்டுக்கள் மலர்வதுவும் மலையி ருந்து
கொட்டுகின்ற அருவிகளும் நடந்து வந்து
கொஞ்சுகின்ற நதிகளுடன் மேகக் கூட்டத்
திட்டுகளும் கதிரவனால் காலை மாலை
தீட்டுகின்ற ஓவியமும் நெஞ்சந் தன்னைத்
தொட்டின்பம் தரும்வசந்தம் என்ற போதும்
தொல்லைதரும் கவலைகளும் வசந்த மேயாம் !
பார்க்கின்ற பார்வையாலே சோகம் கூடப்
பரவசத்தைத் தருகின்ற வசந்த மாகும்
போர்கூட வசந்தமாகும் விழுப்புண் ணோடு
பொருதுபெற்ற வெற்றியோடு திரும்பும் போது !
சீர்கொண்டு வாராத போதும் பெண்ணோ
சிறந்தபண்பில் திகழ்ந்திட்டால் வசந்த மேயாம்
ஏர்முனையால் உழுதுவரும் வியர்வை கூட
எழும்பயிரின் செழிப்பாலே வசந்த மாகும் !
பிரசவத்தின் இடுப்புவலி துன்ப மெல்லாம்
பிறந்தசிசு முகம்காணின் வசந்த மாகும்
விரலடியில் காய்த்திட்ட காய்ப்பு மிங்கே
விடியலிகைத் தந்துவாழ்வை வசந்த மாக்கும் !
சிரம்தாழ்த்தி வணங்குகின்ற பணிவும் தீயாய்த்
சீறுபகை தனைமாற்றி வசந்த மாக்கும்
முரண்களெல்லாம் அனுபவத்தை நமக்க ளித்து
முன்னேற தடையுடைக்கும் வசந்த மாகும் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.