துணிவிருந்தால் காதல் செய்க
செந்தமிழர் வாழ்வியலில் சங்கம் தன்னில்
செழித்திருந்த களவுகற்பு முறைகள் மாறி
முந்தியில்லா சாதியிங்கு முளைத்து நின்று
முட்புதராய் வளர்ந்துள்தை வெட்டி விட்டுச்
சந்தித்த கண்களிலே பிறந்த அன்பைச்
சாதிக்கும் திருமணமாய் மாற்று தற்கே
எந்தவொரு தடையினையும் எதிர்த்து நிற்க
எண்ணத்தில் துணிவிருந்தால் காதல் செய்க !
மேல்சாதி கீழ்சாதி வேறு பாட்டால்
மேனியெல்லாம் ஆணவத்தின் நிறம்ப டர்ந்து
வேல்வாளால் தெருவினிலே வெட்டிப் போட
வேடிக்கை பார்க்கின்ற சமுதா யத்தில்
நால்வருடன் சண்டையிடும் வலிமை யோடு
நம்பிவந்த பெண்மணியைக் கைபி டிக்க
வால்முறுக்கி மிதில்பிடித்தே ஏறு தன்னை
வாகைகொண்ட துணிவிருந்தால் காதல் செய்க !
பொருளீட்டித் திரும்பிவந்து காதற் பெண்ணைப்
பொறுப்புடனே மணமுடித்த சங்க காலப்
பெரும்பண்பின் ஆண்மகனைப் போல வின்று
பெற்றோரின் ஆசைக்குப் பணிந்தி டாமல்
திருமணத்தைத் தட்சணைதாம் கேட்டி டாமல்
திருவாக நடத்துகின்ற துணிவி ருந்தால்
இருமனங்கள் கலக்கின்ற காதல் செய்க
இன்பமுடன் வாழ்வதற்கே காதல் செய்க !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.