அப்பாவின் நினைவுகள்
எங்கோ ஒருவர்
என் பெயரோடு
சேர்த்து
அப்பாவின் பெயர்
உச்சரிக்கையில்
மனம் அவருக்காய்
ஏங்குகிறது.
அவர் பார்க்காத விமானத்தில் நான்
பயணிக்கும் தருணங்களில்
பணியாளர்கள்
அவர் பெயரில்
எனை அழைக்கையில்
இந்த பஞ்சு மேகங்களுக்கெல்லாம்
மேலே எங்கோ ஓர் இடத்தில்தான்
அவர் இருக்கிறார் என்று
எண்ணத் தோன்றுகிறது.
கஷ்டப்பட்டுப்
படித்து வாங்கும்
ஒவ்வொரு சான்றிதழிலும் அவர் பெயர் பார்க்கையில்
நித்தம் எமைப் பள்ளிக்கு
அவர் சைக்கிளில் சுமந்த நாட்கள்
நினைவில் வந்து செல்கிறது.
வெள்ளைக்காரனோடு சரிக்குச்சரி விவாதிக்கையில்
கல்லூரியில் சேர்க்கையில் அச்சப்படாமல்
என் அப்பாவைப் போல்
நீ ஆங்கிலத்தில் பேச வேண்டும்
என்று அவர் சொன்ன அறிவுரை
என் நெஞ்சில் நிற்கிறது.
இப்படியாய் வாழ்வின்
எல்லா நேரங்களிலும்
என்னுள் நிறைந்திருக்கிறார்
என் அப்பா
- பேரா. டேனியல் ரூபராஜ் ரத்தினசாமி, மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.