சுமைதாங்கி
அண்ணனென்று தங்கையர்கள் அழைத்த போதும்
அடியொற்றித் தம்பியர்கள் வந்த போதும்
கண்ணியமாய் முன்நிறுத்திப் பெற்றோர் எந்தக்
காரியமும் எனைக்கேட்டுச் செய்த போதும்
வண்ணமயக் கனவுகளை நனவாய் ஆக்கும்
வளர்சுமைகள் வருமென்று நினைத்தி டாமல்
மண்மீதில் குடும்பத்து மூத்தோன் என்னும்
மரியாதைப் பெருமையிலே மகிழ்ந்து போனேன்!
முதிர்கன்னி கோலத்தில் வீட்டிற் குள்ளே
முகிழாதோ வாழ்வென்ற ஏக்கத் தோடு
குதிர்போல நின்றவளின் நெஞ்சத் தீயைக்
குளிர்விக்கத் தங்கத்தை நீராய் ஊற்றி
நிதியளித்து முடிபோட்டுக் கரையைச் சேர்த்து
நிமிர்தற்கு கரமூன்றி முயலு முன்னே
குதித்தோடி தம்பிவந்தான் பட்டத் தோடு
குதிரைக்கொம் பாம்பணிக்காய்க் குதிரை யானேன்!
பரிந்துரைக்குப் பல்லிளித்துக் கையூட் டிற்குப்
பணம்புரட்டி எலும்புடையப் பெற்றுத் தந்து
சிரிக்கின்ற நரைமுடியில் நிமிர்ந்து பார்த்தேன்
சீர்கேட்டுக் குழந்தையுடன் தங்கை நின்றாள்
வரிசையாகத் தேவைகளைத் தீர்த்து வைத்து
வாய்த்தசுமை தீர்ந்ததென்று முதுகைத் தூக்கிச்
சரியாக நிறுத்திவைக்க முனைந்த போது
சலிப்போடு முதுமைவந்து புகுந்த தென்னுள்!
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.