பொருள் தேடும் மௌனம்
கீரல் ஏதும்
இதுவரையும் விழாத இதய நாளங்கள்
சற்றே கொடூரமாய்ப் பிளந்திருந்தன!
உள்ளுறைந்த மகிழ்வுகளின்
இருப்பைத் தகர்த்தன
அவளின் முறிவு மொழிகள்!
முற்றிலுமாய்ப் புரியவில்லை இம்மொழிகள்!
அவள் போனால் போகட்டும்!
பொருள் மட்டும் புரிய வேண்டும்!
இதயத்தின் தேற்றுதலை இங்ஙனமே செய்ய இயலும்!
உலகு காணா இடமும் தேடி அலைந்தேன்
உதிர்த்த மொழியின் நுண்மான் பொருள் நாடி!
தொலைந்து கிடந்த பொருள்கள் பலவற்றை
அலைந்து எடுத்தேன்!
அவற்றில் இல்லை.
சட்டென மேகங்களுள்!
பிற்பாடு பூமிக்குள்!
கொஞ்சநேரம் கடந்து பால்வெளிக்குள்!
பாழாய்ப்போன பொருள்
எங்கு காணினும் புலனில்லை.
தொடுத்த வழியின் பின் சென்று
முகிழ்த்த இடம் வந்தடைந்தேன்!
விம்மல்களின் ஓலங்களிடையில்
உவர் நீர்த் தேக்கத்தில் ஊரிக் கிடந்த
கண்கள் மட்டும் அவளைக் கண்டன!
வாயசைத்தது அவள்தான்!
உண்மை!!
முறிவு மொழி விளைவும்!
உண்மையில் உண்மை!!
ஆனால் பேசியது வேறு யாரோ!
- ஜெ. கார்த்திக், கரூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.