வரிசையே வாழ்க்கை
வரிசையிலே நின்றபடி வாக்க ளித்தே
வணங்கிநின்ற தலைவரினைத் தேர்ந்தெ டுத்து
வரிசையிலே நின்றிடுவர் அவரின் வீட்டு
வாசலிலே அவர்முகத்தைக் காண்ப தற்கே !
பெரிதாக விளம்பரந்தான் செய்து விட்டு
பெயர்சூட்ட வருகின்ற அமைச்சர் தம்மை
வரிசையாக நின்றபடி பணிகள் விட்டே
வரவேற்கக் காத்திருப்பர் சாலை யோரம் !
வயலினிலே விளைந்திட்ட விளைச்சல் தம்மை
வாங்கிட்ட கடனுக்காய்த் தந்து விட்டே
அயலானைப் போல்அரசு கடையின் முன்பு
அரிசிவாங்க நின்றிடுவர் வரிசை யாக !
கயமையினைத் தொழிலாகக் கொண்ட ஆட்சிக்
கயவர்கள் தாம்கொழிக்க வஞ்ச கத்தால்
மயக்கிடவே திறந்திட்ட மதுக்க டையில்
மயங்கிடவே நின்றிடுவர் வரிசை யாக !
பண்பாட்டைச் சீரழிக்கும் திரைப்ப டத்தைப்
பார்ப்பதற்கு நின்றிடுவர் வரிசை யாக
கண்தெரியா தெய்வத்தைக் காண்ப தற்கும்
காத்திருப்பர் வரிசையாக கோயில் முன்பு !
வண்ணமிகு வாழ்க்கையினைக் கெடுப்ப தற்கு
வரிசையாக நின்றிருக்கும் எத்தர் தம்மைக்
கண்கண்டும் வரிசையாக செல்வ தன்றிக்
கண்டிக்க மட்டுமிங்கே வரிசை யில்லை !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.