நெகிழியைத் தவிர்த்து நிலத்தை நிமிர்த்து
காற்றுதனை மாசாக்கும் புகையைப் போல
கழிவுநீரால் மாசாகும் ஆற்றைப் போல
ஊற்றுதனை அடைக்கின்ற நெகிழி யாலே
உயிர்காக்கும் மண்ணெல்லாம் மலடாய் ஆகும் !
கூற்றுவன்போல் நிலம்மீது பரந்து நின்று
கொட்டுகின்ற மழைநீரைத் தடுப்ப தாலே
ஏற்றத்தில் நீரிறைக்கும் கிணற்றுக் குள்ளே
எங்கிருந்தோ வரும்நீரும் நின்று போகும் !
மக்காத குப்பையாக நெகிழி நின்று
மண்தாயின் மூக்கோடு வாய டைக்கும்
சக்கையாக மண்சத்தைப் பாழாய்ச் செய்து
சந்ததிக்குச் சாக்காட்டை விருந்த ளிக்கும் !
பொக்கைவாய் தாத்தாபோல் பூமி யாகிப்
பொலிவிழந்து மரம்செடிகள் பட்டுப் போகும்
தக்கபடி நெகிழியினைத் தடுக்கா விட்டால்
தங்காது துளிநீரும் நிலத்திற் குள்ளே !
தாள்களிலும் துணிகளிலும் பைகள் தைத்தும்
தரமான பொருள்வாங்க எடுத்துச் செல்வோம்
பால்தயிர்நெய் எண்ணெயினை வாங்கு தற்குப்
பாத்திரத்தைக் கடைகளுக்கு எடுத்துச் செல்வோம் !
நாள்தோறும் விழிப்புணர்வை மக்கட் கூட்டி
நஞ்சென்றே நெகிழிதனைத் தவிர்க்கச் செய்து
கால்பதிக்கும் வரலாற்றை நமக்க ளிக்கும்
கனிமவள நிலந்தன்னை நிமிர வைப்போம் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.