நீளும் மர நிழல்கள்
வீட்டின் அடையாளமாய்ச்
சுவரில் சாய்ந்திருக்கிறது
அப்பாவின் சைக்கிள்.
*****
படையற் சோறு
வீணாய்ப் போகிறது
எட்டிப் பார்க்கும் நாய்
*****
புத்தகப் பக்கங்களைப்
புரட்டிப் போடுகிறது
மின்விசிறிக் காற்று
*****
ஓயாமல் வாசலை
எட்டி எட்டிப் பார்க்கிறது
கோடை வெயில்
*****
பக்கத்து வீட்டுப் பகைவனுக்கும்
உதவிக் கொண்டிருக்கும்
நீளும் மர நிழல்கள்
*****
எல்லை தாண்டி
தப்பிப் போகும் காதலர்கள்
முறைக்கும் அய்யனார் கண்கள்
*****
சாய்வு நாற்காலியில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
அப்பாவின் நினைவுகள்
*****
வாய் நிறையப் புன்னகைக்கும்
வரவேற்பில் பெண்
வயிற்றுப் பசி
*****
நெஞ்சுருகும் நினைவுகள்
நிறைந்தே இருக்கின்றன
முதியோர் இல்லங்கள்
*****
குடிசைக்குள்ளே
அணையாத் தீ
வயிற்றுப் பசி
- இளவல் ஹரிஹரன், மதுரை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.