வன்மம்
வன்மத்தால் பெறுகின்ற பயன்தான் என்ன
வாழ்வெல்லாம் தீராத பகைமை தானே
வன்மத்தால் பழிவாங்கும் குணமே ஓங்கி
வாழ்வெல்லாம் நிம்மதியை இழக்கச் செய்யும்
வன்மத்தை நெஞ்சிற்குள் ஏற்றி வைத்தால்
வளர்புற்று நோய்யுடலை அரித்தல் போல
நன்மையினை தீமையினை ஆய்ந்தி டாமல்
நாளெல்லாம் சிந்தனையை சீர ழிக்கும் !
வயல்வரப்பு தகராறு வன்ம மாகி
வருங்கால சந்ததியர் மோது கின்றார்
அயலிருக்கும் மாநிலத்தார் வன்மத் தாலே
அணைகட்டிக் காவிரியைத் தடுக்கின் றார்கள்
செயலுக்குக் காரணமே அறிந்தி டாமல்
செதுக்கிநெஞ்சில் பதியவைத்த வன்மத் தாலே
நயந்தொன்றாய் இருந்திட்ட பாக்கித் தானோர்
நஞ்சுதனை உமிழ்கின்றார் ஒவ்வொர் நாளும் !
சிறுபொறித்தீ பெருங்காட்டைத் தீய்த்தல் போல
சிறிதான மனக்கருத்து வேறு பாடு
வெறுப்புதனை வளர்த்துபெரும் வன்ம மாகி
வெட்டுகுத்தில் உயிர்பறித்து வாழ்வ ழிக்கும் !
செறுநரெனப் பிறப்புதனில் யாரு மில்லை
செயல்களினால் வருவதுவே பகையும் நட்பும்
அறுசுவையாய் வாழ்வமைய அன்பு தன்னை
அடித்தளமாய் அமைத்திடுவோம் ஒழிப்போம் வன்மம் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.