காலமெனும் மருந்து
காலமெனும் மருந்தொன்றே கவலை ஆற்றும்
கண்கண்ட காட்சிகளை மறக்கச் செய்யும்
ஆலத்தை விழுதுகள்தாம் தாங்கல் போல
அனுபவங்கள் தந்துநமை உயரச் செய்யும் !
கோலத்தை மாற்றிமாற்றி மரங்கள் தம்மைக்
கொடுக்கவைக்கும் காய்கனிகள் பலன்கள் போன்று
ஞாலத்தில் பருவங்கன் மாற்றி மாற்றி
ஞானத்தைத் தருவதுவும் காலம் ஒன்றே !
அன்பான தாயிறந்த துக்கம் தன்னை
ஆசையாகப் பாதுகாத்த பொருளி ழப்பை
பின்முதுகில் குத்திட்ட துரோகம் தன்னை
பின்னடைவு தந்ததோல்வி சோர்வு தன்னை
இன்னுமுள்ள துயரங்கள் நிலையாய் நெஞ்சுள்
இருந்ததென்றால் வாழ்வெல்லாம் நரக மாகும்
நன்றாக மறதியெனும் மருந்தைக் காலம்
நமக்களித்துக் காப்பதாலே வாழு கின்றோம் !
மருந்தாகக் காலம்தான் இல்லை யென்றால்
மறதியின்றி நினைவுகளில் புழுங்கிப் போவோம்
கருத்துக்கள் மோதலாலே பகைமை யாகிக்
கனல்குளிர்ந்து போகாமல் எதிர்த்தே நிற்போம் !
வருங்காலம் நல்லதாகும் என்றெண் ணாமல்
வருத்தத்தில் நிகழ்ந்ததெண்ணி வாடிப் போவோம்
அருமருந்தாய் காலம்தான் இருப்ப தாலே
அனைத்தையுமே மறந்துநாமும் வாழு கின்றோம் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.