குன்றிலிட்ட விளக்காவர்
படமாக வரைந்துள்ள கழுதை மீது
பாரத்தை ஏற்றுதற்கு முடிந்தி டாது
மடத்தனங்கள் நிறைந்துள்ள மனத்திற் குள்ளே
மாறுபட்ட சிந்தனைகள் தோன்றி டாது !
நடமாட்டம் இல்லாமல் முடங்கி ருந்தால்
நாட்டிலெந்த செயல்களுமே நடந்தி டாது
குடத்துள்ளே விளக்குதனை வைத்தி ருந்தால்
கூடியிள்ள இருள்விலக்க இயன்றி டாது !
மென்பொருளைக் கணினிக்குள் செலுத்தி விட்டால்
மேதினியே கைகளுக்குள் அடங்கிப் போகும்
முன்வந்து துணிவோடு எதிர்த்து நின்றால்
முடக்கவரும் தடைகளுமே தகர்ந்து போகும் !
குன்றின்மேல் ஒளிவீசும் விளக்கி ருந்தால்
கூச்சலிடும் இருள்கூட ஓடிப் போகும்
தின்கின்ற நாச்சவையில் திளைத்தி டாமல்
திண்தோளில் உழைப்பிருந்தால் வெற்றி காண்பர் !
விண்மீது கல்பனாதாம் பறந்த போல
விளையாட்டில் டெண்டுல்கர் உயர்ந்த போல
மண்மீது தெரசாதாம் சிறந்த போல
மனத்தினிலே துணிவிருந்தால் அவர்போல் ஆவர் !
கண்முன்னே நடக்கின்ற கயமை கண்டும்
கடந்துசெல்லும் கோழையென இருந்தி டாமல்
எண்ணத்தில் நேர்மையுடன் செயல்கள் செய்தால்
என்றென்றும் குன்றிலிட்ட விளக்காய் ஒளிர்வர் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.