எது நாகரீகம்?
நுனிநாக்கில் ஆங்கிலத்தைப் பேசி வாயில்
நுழையாத வடமொழியில் பெயர்கள் சூட்டிக்
கனிவிடுத்துக் காய்களினை உண்ணல் போன்று
கல்விதன்னைப் பிறமொழியில் கற்க வைத்துக்
குனிந்திங்கே மேல்நாட்டு மோகத் தாலே
குக்கல்போல் கால்நக்கித் தொன்மை யான
தனித்தமிழைப் பண்பாட்டைப் புறக்க ணித்துத்
தமிங்கிலனாய்த் திரிவதன்று நாக ரீகம் !
பொட்டிட்ட முகத்தினிலே மஞ்சள் பூசிப்
பொலிகின்ற மங்கலத்தில் மேனி மூடும்
கட்டாங்கி சோலையிலே திகழும் போது
காண்பவர்கள் வணங்கிடுவர் அதைவி டுத்துக்
கட்டான உடல்காட்டும் ஆடை மாட்டிக்
கண்களொடு இதழ்கட்கு வண்ணம் தீட்டி
வட்டமிடும் ஆண்களுக்குக் காம மூட்டும்
வகையினிலே நடப்பதன்று நாக ரீகம் !
நட்பிற்கு நஞ்சுண்ணல் துன்பம் தன்னில்
நலிந்தவர்க்குத் துணையாக அரவ ணைத்தல்
கொட்டும்தேள் கொடுக்காகத் தீய சொற்கள்
கொட்டிடினும் மன்னித்து மறந்து போதல் !
வட்டமாக இரையுண்ணும் புறாக்கள் போல
வரவேற்றுச் சுற்றத்தை மதித்துப் பேணல்
பெட்புடனே பெரியாரை அடிப ணிந்து
பேணுகின்ற ஒழுக்கந்தான் நாக ரீகம்!
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.