யார் நீ அழகுப் பெண்ணே!!

யார் நீ அழகுப்பெண்ணே!
அன்பின் பிறையா?
அழகின் புதையலா?
மயிலிறகின் நகலா?
ஓவியத்தில் அடங்கா கற்பனையா?
பூக்களின் இளவரசியா?
உலகம் அறியா அதிசயமா?
சித்திரம் மயங்கிய சிற்பமா?
பெண்ணே நீ…
* புதையலா! மயிலிறகா! ஓவியமா! இளவரசியா! அதிசயமா! என்ற
புகழ்ச்சி வார்த்தைகளில் வீழ்வேன் என நினைத்தாயோ?
உன் புகழ்ச்சி வார்த்தைகளைப் புறந்தள்ளி, என் இலட்சியத்தை அடையும்
இரும்புப் பெண்ணாவேன் என்பதை நினைவில் கொள்!
*பெண்ணே! உன்னால் என்ன முடியும்? என்ற
கேலிப்பேச்சில் முடங்கிப்போவேன் என நினைத்தாயோ?
முட்டி எழுந்து நீ மூர்ச்சையாகி நிற்கும் அளவிற்கு சிகரம் தொடும்
சிங்கப்பெண்ணாவேன் என்பதை நினைவில் கொள்!
*எதற்கெடுத்தாலும் வருத்தப்பட்டு வலுவிழந்து
வாழ்க்கையைத் தொலைப்பேன் என நினைத்தாயோ?
எடுத்த இலக்கில் பயணப்பட்டு வெற்றியை கைக்கொள்ளும்
புதுமைப் பெண்ணாவேன் என்பதை நினைவில் கொள்!
*ஊர் தூற்றும் வார்த்தைகளில் வீட்டில்
ஒடுங்கி, முடங்கிக் கிடப்பேன் என நினைத்தாயோ?
அதே ஊர் முன்னால் என் இலக்கை எட்டிப்பிடித்து
சாதனைப் பெண்ணாய் வலம் வருவேன் என்பதை நினைவில் கொள்!
*தோல்வியின் வலி தாளாமல் பாறைக்கல்லாய் பலமிழந்து
சிதைந்து போவேன் என நினைத்தாயோ?
மனதை கல்லாக்கி சிலையாய் உருவெடுத்து, உவகையோடு வலம் வரும்
உத்தமப் பெண்ணாவேன் என்பதை நினைவில் கொள்!
*கட்டுப்பாடுகளை விதித்து வீட்டிற்குள் பூட்டி வைத்து விதவிதமாய்
காரணம் கற்பிக்கலாம் என நினைத்தாயோ?
அத்தனைப் பூட்டையும் தகர்த்தெரிந்து சரித்திரங்களை படைக்கும்;
சத்ரியப் பெண்ணாவேன் என்பதை நினைவில் கொள்!
*கதை பல கூறும் காதலில் வீழ்ந்து விட்டில் பூச்சியாய்
வீழ்ந்து மடிவேன் என நினைத்தாயோ?
காதலைப் புறந்தள்ளி என் பெற்றோர் கனவை நனவாக்கும்
காவியப் பெண்ணாவேன் என்பதை மனதில் கொள்!
*எதிர்மறை எண்ணங்களை என் மனதில் விதைத்து,
திசைத்திருப்பலாம் என நினைத்தாயோ?
நேர்மறை எண்ணங்களை மனதில் குவித்து நேர்க்கோட்டில் பயணப்படும்
நித்தியப் பெண்ணாவேன் என்பதை நினைவில் கொள்!
*கட்டாயத் திருமணம் செய்து வைத்து என்னை கண்ணீர் கடலில்
மூழ்க விடலாம் என நினைத்தோயோ?
கல்வியே என் அடையாளம் என்பதை அனைவருக்கும் கற்பித்து,
கலைமகளின் பெண்ணாவேன் என்பதை நினைவில் கொள்!
*அதிர்ந்து பேசுதல் அழகல்ல என்ற அபத்தங்களைக் கூறி
அடக்கி வைக்கலாம் என நினைத்தாயோ?
என் உரிமைகளை உரக்கக் கூறி உரியமைகளை பெறும்
உத்வேகம் நிறம்பியப் பெண்ணாவேன் என்பதை நினைவில் கொள்!
*பெண்குழந்தையைப் பெரும் சுமையாக நினைத்து கருசிதைத்து
ஆனந்தம் அடையலாம் என நினைத்தாயோ?
கருவிலே உருகொண்டு வீழ்த்த நினைத்தோரையும் தாங்கும்
தாரகைப் பெண்ணாவேன் என்பதை நினைவில் கொள்!
*பெண்ணே! உம்மிடம் சொல்வதற்கு சில வார்த்தைகள் உண்டு!
வீண் கனவில் மிதக்காதே! வீண் கற்பனையில் திளைக்காதே?
உமது தேடல்! உமது இலட்சியம்! உமது போராட்டம்! உமது வெற்றி!
விடியல் உமதே! வெற்றி நமதே!
- செ. நாகேஸ்வரி, வேட்டவலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.