உமிழ்நீர் உயிர்நீர்
வாய்க்காலின் நீரைவிட வாயின் நீர்தாம்
வாய்த்திட்ட நன்நீராம் வாழ்வ தற்கே
பாய்ந்துவரும் ஆற்றுநீரோ பயிர்வ ளர்க்கும்
படிந்திருக்கும் நாக்குநீரோ உயிர்வ ளர்க்கும் !
காய்கனிகள் சத்தாகி உடல்வ ளர்க்கக்
கசிகின்ற உமிழ்நீர்தாம் உதவி செய்யும்
தாய்சேயைப் பாலூட்டிக் காப்ப தைப்போல்
தகுவுணவாய்ச் செரித்துடலைக் காப்ப தெச்சில் !
நுண்கிருமி தனையழிக்கும் எதிர்ப்புச் சக்தி
நிறைந்திருக்கும் நல்லியற்கை மருந்தே எச்சில்
புண்கள்மேல் எச்சிலினைத் தடவும் போது
புறத்திலிடும் மருந்தைப்போல் விரைவில் ஆற்றும் !
உண்டுடலை அரிக்கின்ற இனிப்பு நோயை
உடலுக்குள் தணிப்பதுவும் நாவின் நீரே
கண்மறைவில் புகைகுடித்தல் செய்வோர் நோயைக்
கச்சிதமாய்க் காட்டிவிடும் வாயின் நீரே !
நன்றாக உணவுடனே உமிழ்நீர் சேர்த்து
நறுங்கூழாய் ஆக்கியதை விழுங்கும் போதே
நின்றுபுளி ஏப்பமின்றி எளிதாய்ச் செரித்து
நிறைசத்தாய்க் குருதியிலே முழுதாய்ச் சேரும் !
முன்னோர்கள் இதைநன்கு உணர்ந்த தாலே
முழுவுணவைப் பொறுமையுடன் சுவைத்தே உண்டார்
இன்றவர்போல் சுவைத்துணவை உண்டே நோய்கள்
இல்லாத உடலாக வாழ்வோம் நாமும் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.