இதுவும் கடந்து போகும்
இதுவேண்டும் அதுவேண்டும் என்று கேட்கும்
இளவயது ஆசைகளும் கடந்து போகும்
முதுமைக்கு வரும்போது அனுவ வத்தின்
முதிர்ச்சியாலே விருப்பங்கள் கடந்து போதும் !
செதுக்குகின்ற கல்சிறிது சிறிதாய் மாறிச்
செம்மையான உருவம்தான் பெறுதல் போன்று
எதுவொன்றும் நிலையாக இருப்ப தில்லை
எல்லாமும் மாறுகின்ற தன்மை தானே !
இலைவுதிர்ந்த மரம்மீண்டும் துளிர்த்தல் போல
இன்னலுமே இனிதாகக் கடந்து போகும்
குலைதள்ளி வாழையது சாயும் போது
குட்டியான கன்றங்கே முளைத்து நிற்கும் !
வலையறுந்து போனாலும் சிலந்து மீண்டும்
வாயாலே பின்னியிரை சிக்க வைக்கும்
நிலையாகப் பருவங்களி நின்றி டாமல்
நிதம்சுழன்று வந்தால்தான் இயங்கும் ஞாலம் !
இரவுபகல் எனமாறி வருதல் போன்று
இன்பதுன்பம் எல்லாமே வந்து போகும்
வரவாகத் தோல்விமட்டும் வருவ தில்லை
வந்ததோல்வி வெற்றிக்கு வழியைக் காட்டும் !
உரம்போன்ற தோளிரண்டில் உழைக்கும் போதே
உனைவாட்டும் வறுமையதும் ஓடிப் போகும்
குரலெடுத்துக் கூவுயெல்லாம் கடந்து போகும்
குவிக்கின்ற நற்புகழ்தான் நிற்கு மிங்கே !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.