காதலை வரவேற்போம்
செம்புலத்தில் பெய்தமழை கலத்தல் போல
செழும்மனங்கள் கலப்பதுவே காத லாகும்
சம்மதமாய் இருமனங்கள் ஒன்று சேர்ந்து
சாயாத உறுதிதானே காத லாகும்
எம்மதமாய் சாதிகளாய் இருந்த போதும்
எழுமுணர்வில் கலப்பதுவே காத லாகும்
நம்முன்னோர் தொன்றுதொட்டுக் காத்து வந்த
நல்லதொரு களவுதானே காத லாகும் !
பருவத்தின் கோளாறாய்ப் பிறப்ப தன்று
பாலுணர்வின் வெளிப்பாடே காத லாகும்
உருவத்தைக் கண்டமனம் விரும்ப லன்றி
உள்ளத்தை விரும்புவதே காத லாகும்
கருவாகக் காதலிங்கே இல்லை யென்றால்
கல்மனமாய் உயிரினமே பாழாய்ப் போகும்
திருவான காதலிங்கே தீங்கு செய்யா
திருமணத்தில் முடிந்தின்பம் முகிழச் செய்யும் !
அகமிணைந்த காதலாலே மதங்கள் போகும்
அகங்காரச் சாதிகளும் ஓடிப் போகும்
தகவுடனே உயர்வுதாழ்வு ஒன்று சேரும்
தழைத்திங்கே கணியன்சொல் ஓங்கொ லிக்கும்
முகங்களெல்லாம் புன்னகையில் ஒளிர்ந்து நிற்கும்
முரண்களெல்லாம் களைந்தன்பே செழித்தி லங்கும்
மகத்தான காதலினை வரவேற் போமே
மனிதத்தை நிலைநாட்டி வாழ்த்து வோமே !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.