மன்னித்தால் பாழாவோம்
ஒருகன்னம் மீதறைந்தால் மறுகன் னத்தை
ஓர்மையுடன் காட்டென்னும் அருங்க ருத்தை
இருகைகள் கால்களினைச் சிலுவை தன்னில்
இருத்தியாணி அடித்துமுள்ளின் மகுடம் சூட்டி
வருத்திட்ட போதவரின் தவறு தன்னை
வளரன்பால் மன்னியுங்கள் என்று ரைத்த
அரும்பண்பை ஏற்றுமன்னிப் பளித்த தாலே
அடைந்திட்ட நாட்டுநிலை எண்ணிப் பார்ப்பீர் !
நாள்தோறும் தவறுகளைத் தெரிந்தே செய்யும்
நாடாளும் அரசியலார் கயவர் தம்மை
தாள்கோப்பு நகர்த்தக்கை யூட்டு கேட்டுத்
தாமதிக்கும் அரசாங்க அலுவலர் தம்மை
ஆள்பண்பு படிப்பொழுக்கம் பார்த்தி டாமல்
அவர்சாதி தனைப்பார்க்கும் கீழ்மை யோரைத்
தோள்கொடுத்துத் தாங்கிநாமோ மன்னித் தாலோ
தொடர்கின்ற அவர்செயலால் நாடே பாழாம் !
கல்வியினை வணிகமாக்கி விற்போர் தம்மை
கலப்படத்தில் பொருள்விற்றுக் கொழுப்போர் தம்மை
நல்லிணக்கம் கெடுத்துமத சாதி தூண்டி
நட்புதனைப் பகையாக்கும் வன்நெஞ் சோரை
கொல்லுகின்ற தீமதுவை வீதி தோறும்
கொடுத்துவாழ்வைப் பாழ்செய்யும் அரசாங் கத்தை
எல்லோரும் ஒள்றிணைந்து தண்டித் தால்தான்
ஏற்றங்கள் நாம்பெறுவோம் நாடும் வாழும் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.