மின்மினிப்பூக்கள்
விசாலமான நிலத்தில்
விருட்சத்தின் நிழலுக்காகக்
காத்திருக்கிறது ஆவினங்களும்...
அயராது பறக்கும், அலுப்பு அறியா
இரட்டைப்பாத மின்மினிகளும்...
கிளறிய மண்ணில் எல்லாம்
வாசம் பருகிவிட்டுச் செல்கின்றன
பத்தடி உயரம் கொண்ட
ஐந்து வயது ஆலமரக்கன்றின் மேல்
அமர்ந்த இளம் மின்மினிப்பூக்கள்...
தோட்டக்காவலுக்குப் படித்து
முடித்தாற் போல்,
வண்டுகளுக்கு வழிகாட்டி
மகரந்தம் கடத்தி வந்து
புதிய படைப்புகளுக்குதவும்
மின்மினிப்பூக்கள்...
ஒரேயொரு சிட்டிக்குருவியின்
கழிவை ஏற்காத பூக்கள்
பல குயில்களுக்காகக்
கிளைகளை வளர்க்க
அலை மோதுகின்றன...
விதையிட்டு மரமாக்கிக்
கிளையோடு கயிறு கட்டி
ஊஞ்சலாடுகின்றன
வைத்த விதையின் ரேகை
அழியாத யாரோ ஒருவரின்
நகல்களாய் ஆடிக்கொண்டிருக்கும்
பேரன் பெயர்த்தியெனும்
மின்மினிப்பூக்கள்...
பறக்கட்டும்...
சிறகை விரிக்கட்டும்...
அதற்குத்தானே...
ஆலமரம் கிளைகளிட்டது
இன்பமாய்... ... ...
- கவிஞர் கார்கவி, நாகப்பட்டினம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.