சொந்த வீடு
ஓலைகளின் ஓட்டைகளே சன்ன லாக
ஓடிவரும் காற்றுக்கு வாயி லாக
காலைவரும் கதிரவனின் முகத்தில் சிந்தும்
கற்றைகளைக் காட்டுகின்ற ஆடி யாக
மாலையிருள் வானத்தில் மின்னு கின்ற
மத்தாப்பு மீன்களுக்குப் பாதை யாக
நூலைப்போல் விழும்மழைக்குக் குழாயு மாக
இலங்குகின்ற குடிசைதாம் எங்கள் வீடு!
சாணத்தால் பெயராத தரையும் வெள்ளைச்
சாந்துதனைப் பாராத சுவரும் மண்ணின்
பானையொடு மூன்றுகல்லின் அடுப்பும் பிய்ந்த
பாயோடு கிழிந்துபோன போர்வை மேனி
மானத்தைக் காக்கவொரு துணியும் கண்ணில்
மண்டிவரும் நீர்துடைக்கும் கரமும் என்றே
ஆனமுதல் கொண்டிருக்கும் குடிசை எங்கள்
அப்பனவன் அப்பன்வழி வந்த சொத்து!
முப்பாட்டன் வாழ்ந்தபோதும் என்றன் அப்பன்
முழுவதுமாய் வாழ்ந்தபோதும் காய்ந்த வெய்யில்
பெய்தமழை பசித்திருந்த வயறு தன்னைப்
பெற்றதாயாய்க் காத்ததுபோல் இன்று மென்னைத்
தப்பாமல் காக்கின்றாள்! வியர்வை சிந்தித்
தளர்ந்துடலில் நானிறந்த பின்பும் இங்கே
எப்போதும் எம்மெச்சப் பெயரைச் சொல்லும்
எம்மாற்றம் ஊர்பெரினும் குடிசை நின்றே!
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.