மருதத்திணை
இந்திரனை மனம்வைத்து விடியற் காலை
இருள்விலகும் முன்தோளில் கலப்பைத் தூக்கிச்
சந்திரன்தான் மறையுமுன்னே வயலி றங்கிச்
சகதியிலே கால்பதிப்பர் உழவ ரெல்லாம்
சிந்தையிலே பயிர்வைத்துக் களைபி டிங்கிச்
சிதைக்காத தழையுரத்தை நிலத்தில் தூவி
எந்திரங்கள் இல்லாமல் உழத்தி யோடே
ஏற்றத்தில் நீரிரைப்பர் பாட்டுப் பாடி !
நாரையொடு நீர்கோழி குருகு அன்னம்
நடைபயிலும் புல்விளைந்த வரப்பின் மீது
நீரைவிடா எருமையொடு நாயும் சேர்ந்து
நிலைகலக்கி குட்டையிலே இன்பம் காணும் !
தாரைப்பூ மரைகுவளை இதழ்வி ரித்துத்
தம்மமணத்தால் செல்வோரை அருக ழைக்கும்
கூரையைப்போல் நிழல்பரப்பி மருதம் காஞ்சி
கூன்நிமிர நின்றிருக்கும் கிளைப ரப்பி !
அருங்குளத்தில் ஆற்றினிலே நீச்ச லிட்டே
அழகினிலே மயங்கிபிறர் மனைக்குச் சென்றோன்
தெருபரந்த பேரூராம் மூதூர் தம்மில்
தெரிந்துசினம் கொண்டிருக்கும் மனைவி தன்னை
மருதயாழில் மருதப்பண் இசைத்துப் பாடி
மனத்திருக்கும் ஊடலினைத் தீர்ப்பான் கூடி
கருவூல நெல்மணக்கும் வயல்கள் சூழ்ந்த
கவின்கொஞ்சும் மருதத்தைப் போற்று வோமே !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.