தேடுவோம்... வாருங்கள்...!
தேடல்தான் சிந்தனையைத் தூண்ட வைக்கும்
தேடல்தான் அறிவுதனை வளர வைக்கும்
தேடல்தான் புதுமைகளை விளைய வைக்கும்
தேடல்தான் சாதனையைப் படைக்க வைக்கும் !
தேடல்தான் அறியாமை தன்னை யோட்டித்
தெளிவாக உண்மைகளை அறிய வைக்கும்
தேடல்தான் அனுபவத்தைச் சேர்த்த ளித்துத்
தெளிவான பாதையிலே நடக்க வைக்கும் !
மார்கோனி எடிசன்தன் தேடல் தானே
மகத்தான அறிவியலின் புத்தாக் கங்கள்
நீர்வழியில் சோழனவன் தேடல் தானே
நிலைத்தபுகழ் கடாரத்தின் வெற்றிச் சின்னம் !
ஊர்ஊராய் உ வே சா தேடல் தானே
உயர்வாக நாம்பேசும் தமிழின் நூல்கள்
பார்போற்றும் அமெரிக்க நாடு மிங்கே
பயணத்தின் தேடலினால் கண்ட தன்றோ !
அறிவியலின் தேடலினால் நிலவுக் கோளில்
அடிவைத்தே ஆய்வுகளை நடத்து கின்றார்
பொறியியலின் தேடலினால் உலக மெல்லாம்
பொலிவான தொழிற்சாலை கட்டு கின்றார் !
குறிக்கோள்கள் நல்லவையாய் அமைத்துக் கொண்டு
குவலயத்தை உயர்த்துகின்ற தேடல் செய்தால்
வறியவர்கள் எல்லோரும் வளமை பெற்று
வாழ்கின்ற நிலையுயரும் இன்பம் பொங்கும் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.