பொற்கூண்டு
பெண்பார்க்கும் படலம்தான் முடிந்த பின்போ
பெண்மிகவும் பிடித்ததென்றார் ஆணின் வீட்டார்
கண்பட்டுப் போகமவள் அழகு என்றே
கனிவுடனே ஆண்வீட்டார் புகழ்ந்து ரைத்தார் !
கிண்ணத்துப் பால்போன்று களங்க மில்லாக்
கிளிபோன்ற பெண்ணெங்கட் கிசைவு என்றே
எண்ணத்தைச் சொல்லிவிட்டோம்! மன்ற லுக்கே
எதுவொன்றும் பேசிடலாம் என்று ரைத்தார் !
ஆண்வீட்டார் வசதியுடன் உள்ள வர்கள்
அடுக்குமாடி மகிழுந்து சொத்தாம் என்றே
காண்பவர்கள் மூக்கின்மேல் விரலை வைத்தே
கண்சிமிட்ட மறக்கின்ற பணம்ப டைத்தோர் !
வீண்கனவு நமக்கெதற்கு அவர்கட் கீடாய்
விலைகொடுத்து மணமுடிக்க முடியா தென்று
மாண்புடனே எங்களுக்கோ வசதி யில்லை
மன்னிக்க எனச்சொன்னார் பெண்ணின் தந்தை !
பெண்ணழகைக் கண்டேஎம் இசைவைச் சொன்னோம்
பெரிதாக எதுவொன்றும் போட வேண்டா
பெண்வெளியே பணிசெய்யப் போக வேண்டா !
பெருமையுடன் வீட்டிற்குள் இருந்தால் போதும்
கண்மணியாய் அடங்கிருந்தால் அதுவே போதும்
கச்சிதமாய்ச் சொல்லிட்ட சொற்கள் கேட்டுப்
பெண்ணவளோ பொற்கூண்டு தேவை யில்லை
பெரும்பேறே தன்மானம் என்று ரைத்தாள் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.