தந்தையின் தியாகம்
அன்னைதாம் தியாகத்தின் உருவம் என்றால்
அவர்க்கிணையாய் நிற்பவர்தாம் தந்தை என்போன்
தன்கருவில் குழந்தையினைச் சுமக்கும் தாய்போல்
தன்மனத்துள் குழந்தையினைச் சுமப்போன் தந்தை !
தன்னிடுப்பு வலிபொறுக்க முடியா தாயோ
தன்கண்முன் துடிக்கின்ற துடிப்பைக் கண்டு
தன்னுள்ளே துடித்திடுவான் கண்ணின் நீருள்
தவிப்புதனை மறைத்திடுவான் பிறரின் முன்னே !
தன்னுடைய குருதிதனைப் பாலாய் ஊட்டித்
தாலாட்டித் தாயவள்தாம் வளர்த்தல் போல
தன்னுடைய வருவாயே குழந்தைக் கென்று
தந்தையவன் உழைத்ததனை மகிழ்வாய் ஈவான் !
பொன்னுடலை எறும்பொன்றும் கடிக்கா வண்ணம்
பொழுதெல்லாம் கண்கொண்டு காக்கும் தாய்போல்
பின்னிரவு பொழுதெனினும் காய்ச்சல் என்றால்
பிள்ளையினைத் தோள்மீது தூக்கிச் செல்வான் !
கண்டிப்பால் பிள்ளையவன் வெறுத்த போதும்
கனிவுதனை உள்ளடக்கி அறத்தைச் சொல்வான்
மண்மீதில் உயர்வாழ்வு வாழ்வ தற்கு
மனைவிற்றும் வியர்வைவிற்றும் படிக்க வைப்பான் !
கண்மணிகள் கால்நடக்கா காலம் தன்னில்
கரம்கொடுப்பார் எனப்பலனை எதிர்பார்க் காமல்
தண்மதியம் கதிரைப்போல் இருளைப் போக்கத்
தன்வாழ்வை அர்ப்பணிப்பான் குடும்பத் திற்கே !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.