செவ்வனே செய்க செயல்

வன்மம் பகையை வளர்த்தெடுக்கும் நல்பணிவே
நன்மை பலவளித்து நட்பளிக்கும் - புன்மையிலா
அன்பே உறவை அருகிணைக்கும் என்றென்றும்
நன்னெறியே ஈயும் நலம்!
அஞ்சி முடங்காமல் அச்சம் துடைத்தெறிந்தே
வஞ்சகத்தின் வன்முறையின் வாலறுப்போம் - மிஞ்சுவது
விஞ்சுபுகழ் ஒன்றேதான் தீமைகளைச் சாய்ப்பதற்கு
நெஞ்சு நிமிர்த்து நிமிர்ந்து!
வெற்றுப் புகழுக்காய் வீண்செயல்கள் செய்யாமல்
பற்றால் பழிச்செயல்கள் பற்றாமல் - பொற்புடனே
எற்றைக்கும் நற்பயனை எல்லோர்க்கும் நல்குகின்ற
நற்செயல்கள் செய்திடுதல் நன்று !
மீன்தலை வால்பாம்பாய் முன்பின் முரண்தொடையாய்த்
தேன்பேச்சு வேம்பு செயலாகக் - கூன்மதியில்
பொய்வேடப் போலியெனப் போகாமல் நேர்நின்றே
வேற்றுமையில் ஒற்றுமையைப் பேண் !
வன்மம் வளர்க்காது வாழ்வை; பகைமையோ
இன்பத்தைத் தாரா தினிதறிவாய் - புன்மையிலா
நன்மை விளைவதற்கு நாணும் செயல்விடுப்பாய்
அன்பை மனத்துள் அணிந்து !
பன்முறை எண்ணிடு பல்வழி ஆய்ந்திடு
நின்றிடு நெஞ்சத் துணிவுடன் - இன்முகமாய்
எவ்வகை இன்னல் எதிர்வரினும் அஞ்சாமல்
செவ்வனே செய்க செயல் !
நற்செயல் செய்யா திருப்பினும் செய்வோர்க்கே
மற்றூறு செய்யா திருப்பதே - நற்செயலாம்
கொய்யற்க நன்மா கொடுக்கும் மலர்களினை
செய்யற்க தீய செயல் !
செவ்வாய் நிலவிற்குச் செல்ல வரும்புகழும்
செவ்வாயில் மெய்சொல்லச் சேர்புகழும் - தெவ்வர்பால்
காட்டுமன்பால் காண்புகழும் கண்புகழாம் ஈவதனால்
ஈட்டுவதே நற்புகழாம் ஈங்கு !
வென்றிக்கு வித்தாம் விடாமுயற்சி; ஊறுசெய்தே
குன்றவைக்கும் தீமடியின் தூரெடுத்தே - முன்னேறும்
தாக்கத்தால் நெஞ்சம்தான் தாவிநின்றால் என்றுமவ்
ஊக்கம் தரும்நல் உயர்வு !
நல்லவையை நாம்நினைத்தால் நல்லவையே தான்நடக்கும்
அல்லவையை நாம்நினைத்தால் அல்லவைதான் - சொல்லவரும்
இன்பமுடன் எல்லோரும் இங்கிருக்க நாம்நினைத்தால்
நன்றாய் வருமே நலம்!
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.