கனலெடுப்போம் வா
இருபுறமும் இருந்தமரம் மொட்டை யாக்கி
இல்லாமல் செய்திட்டோம் சாலை போட
அருங்காற்றை மாசாக்கி மலைத கர்த்தே
ஆற்றுமணல் முழுதெடுத்து மலடு செய்தோம் !
இருபோகம் முப்போகம் விளைந்த மண்ணில்
ஈரத்தை உட்டிவிட்ட ஏரி தன்னில்
கரும்புகையைக் கக்குகின்ற தொழிற்சா லைகள்
கட்டிவைத்தே இயற்கையினை நஞ்சாய் செய்தோம் !
கூட்டாக இருந்திட்ட குடும்ப மெல்லாம்
கூறுகூறாய்த் தனித்தனியாப் பிரிந்து போகக்
காட்டாக அன்புடனே அண்ணன் தம்பி
கலந்தொன்றாய் வாழ்ந்ததெல்லாம் நேற்றா யிற்று !
பாட்டிமார்கள் குழந்தைகட்குக் கதைகள் சொல்லிப்
பண்பாட்டைப் பதித்ததெல்லாம் கனவா யிற்று
தோட்டத்தின் நடுவிருந்த ஓட்டு வீடு
தொகுப்படுக்கு மாடிகளாய் மாறிப் போச்சு !
உடலுழைப்பு குறைந்துவிட நோய்த டுக்க
உடற்பயிற்சி மாட்டைவிட்டு நாய்பி டித்தே
முடமாகிப் போனதுயர் உண்மை நேர்மை
முளைத்தெங்கும் படர்ந்ததுவே கயமை ஊழல் !
நடமாட வேண்டியவர் சிறைக்க ளுக்குள்
நல்லவராய்ப் பொல்லாரோ மகுடத் தோடு
தடம்மாறிப் போய்விட்ட வாழ்வை மாற்றித்
தவறுகளைக் களைவதற்கே கனலெ டுப்போம் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.