ஆசை
சித்திரை மழையாய் தீண்டி
சிலிர்க்க வைக்க ஆசை!
சிற்பிக்குள் முத்தாய் நாளும்
சிறையிருக்க ஆசை!
பனித்துளியாய் மாறி பகலவனைப்
பார்த்து உருக ஆசை!
ஒற்றை இதழ் தன்னில்
ஓய்வெடுக்க ஆசை!
வானவில்லை தீண்டி நிலவுக்கு
வண்ணம் தீட்ட ஆசை!
விண்மீன்கள் கொண்டு
வீட்டில் விளக்கேற்ற ஆசை!
கன்னித்தமிழாய் மாறி சான்றோர்
நாவில் தவழ்ந்திட ஆசை!
காலம் என்னும் எமனை
கடந்து வாழ ஆசை!
சூரியனைக் கண்டு சிவக்கும்
தாமரையாய் வாழ ஆசை!
நிலவில் ஒரு நாள் நானும்
பெண்ணுக்கு நீதி கேட்க ஆசை!
பூமித்தாயின் மடியில் நீங்கா
துயில் கொள்ளவே ஆசை!
இறந்த பின்பு மீண்டும்
பெண்ணாய்ப் பிறக்க ஆசை!
- செ. நாகேஸ்வரி, கெடார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.