சுதந்திரதேவியே வணங்குகிறேன்...!
சுதந்திரக் காற்றை நாம் சுவாசிக்க
பல உயிர்களின் மூச்சுக் காற்று
காற்றுடன் கலந்த உன்னதப் பொன்னாள்...
அடிமைச் சங்கிலியை அடியோடு உடைத்த
அற்புதத் திருநாள், ஆனந்தத் திருநாள்...
தேசத்தின் அடையாளத்தை எல்லையில் காட்ட
நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களின்
தியாகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நன்னாள்...
சேற்றில் முளைக்கவில்லை எங்கள் சுதந்திரம்
ஆயிரம் ஆயிரம் வீரத் தியாகிகளின்
செங்குருதியில் முளைத்தது வீரச்சுதந்திரம்...
வீரத்தின் அடையாளமாய் எல்லையில் நின்று
கொட்டும் பனியிலும் விழுங்கும் இருட்டிலும்
தன்சுகம் மறந்து நாடு காத்த
நல்லோர்களுக்கு நன்றி செலுத்தும் நன்னாள்...
பெற்ற சுதந்திரத்தைப் பேணிப் போற்றுகிறேன்
சுதந்திரதேவியே நின்னை வணங்குகிறேன்...!
- முனைவர் ப. விக்னேஸ்வரி, திருமலையம்பாளையம், கோயமுத்தூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.