மரக்கன்று நடும் பித்தன்
சாலையின் நடுவில்
மரக்கன்றுகளை
நட்டுக் கொண்டிருந்தான்
பித்தன்
காரணத்தை விளக்கினான்
கரை ஓரத்தில் நட்டால்
வெட்டப்பட்டு விடுமென்றான்.
அதற்குப் பெயர்
வளர்ச்சியாம் மேம்பாடாம்
அழிப்பதற்குப் பெயரா ஆக்கம்?
அவன் திருப்பி வினவினான்.
குளத்தின் நடுவே
மரக்கன்றுகளை
நட்டுக் கொண்டிருந்தான்
காரணத்தை வினவ,
இல்லையென்றால்
குளம் மண்ணால் மூடப்பட்டுக்
கட்டிடம் கட்டப்படும்
அது இருந்த தடம்
நாளையேத் தெரியாமல் போகும்
என்றான் மீண்டும்
நதிக்கரையில்
மரக்கன்றுகளை
நட்டுக் கொண்டிருந்தவன்,
ஏழை எளியோர்க்கும்
அவ்வப்போது
வீடாகப் பயன்படும்.
நடுவில் நட்டால்
மழைக்கால வெள்ளத்தால்
அடித்துச் செல்லப்பட்டுவிடும் என்றான்.
- விஜயன் முல்லை, சித்தூர், பாலக்காடு மாவட்டம், கேரளா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.