கீழிறங்க மறுக்கும் நீ...?
அந்தக் குரல்
என் செவிகளில் மெலிதாய்
ஒலித்துக் கொண்டிருக்கிறது.
உன் பின்னால் காரணமின்றித்
திரிவதை நிறுத்த முடியவில்லை
என்னால்.
இதோ இப்பெருமழை
நீண்ட நேரப்பொழிவிற்குப்பின்
நின்றுவிடலாம்.
இன்னுமந்த குரல்
என் செவிகளில் பலமாய் ஒலிக்கிறது.
உன் பின் தொடர்ந்தவன் மிக அருகில்
உன்னை நெருங்கிவிட்டதாய்
நினைக்கிறேன்.
பெருமழை முற்றிலுமாய்
நின்றுபோன தருணத்தில்
இப்போதந்த குரல் சருகுகளில்
சலசலத்தோடும் அரவமாய்
என் செவிகளுக்குப் பக்கத்தில்
நெருக்கமாகவும்
தெள்ளத் தெளிவாகவும்
ஒலித்துக் கொண்டிருக்கிறது.
என் புஜங்களின் மேல்
சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும்
மழலையாய்
என்னிதயச் சிருஷ்டிக் கூட்டிலிருந்து
கீழிறங்க மறுக்கிறாய்... ... ...நீ!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.