என்னிதயம் பேசுகிறேன்

இன்றுனக்கு 54 வது
தாலாட்டு நாள்
நம் நட்பகராதிக்கு 41 வது
ஜனன நாள்.
41 வருடமென்பது
எண்ணிக்கை தான்.
இனி நம் நட்பென்பது
பேசப்படும் பல யுகயுகங்கள்.
நட்பின் புனிதம் கெட
இதுவரை இருவரும்
துணைபோனதில்லை
இனியும் போகாது.
இது காலச்சுவட்டில்
எழுதப்படாத உண்மை.
நட்பு பிறந்தது
நம்மில் இருந்து ரசித்து
அதன் வாழ்க்கையை
முழுதாய் வாழ்ந்தது.
அதற்கிது போதாதா...?
நம் காலம் மறைய
அதுவும் மறைந்தே போகும்.
மறுபிறவி எடுக்காது
இவ்வுலகமும்
அதற்கு அனுமதிக்காது.
ஒரு சனியில்
அசைவம் உண்ட உனக்கும்
வாங்கிக் கொடுத்த எனக்கும்
இருவரும் கடவுளின் சாபம்
வாங்கிக் கொண்டதாய்
நினைத்து வருந்தினாய்.
உன்னை உண்டு
அழகு பார்த்ததற்கு நியாயப்படி
நமக்கு வரத்தையருளி
மேலும் நட்பை இறுக்கி
வைத்தது
அந்தப் பொல்லாதக் கடவுள்
என்பது உனக்கும் தெரியும்தானே!
கவிதை ரசிகனே
காலமெல்லாம் கவிதைப் புனைந்தும்
உன் மனம் போலொரு
மலரினும் மென்மையான
கவிதை இதுநாள் வரையிலும்
புனையாத வலி
எனக்குள் இருப்பது
உனக்குத் தெரியுமா...?
எனக்கொரு
உதவிசெய்ய நினைத்தால்
அந்தத் தமிழ்த்தாயிடம்
உன் பிறந்த நாளுக்கு
என் மனம் விரும்பும் அழகிய
கவிதை எழுத அமிழ்தினுமினிய
சொற்களை என் கை வரப்பெற
சிபாரிசு செய்வாயாக...
நீ என் நீ...
நான் உன் நான்...
வாழ்க வளத்துடன் நலத்துடன்
என்னோடு பல்லாண்டு காலம்...
- பிரியமுடன்
நீ அதீத பாசத்துடன்
அழைத்து மகிழும்
உன்... நண்பன்...
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.