வெற்றிக்களம்

விழிநான்கு ஒன்றுபட்டால் அன்புதனில்
விளைகின்ற காதலினை வென்றிடலாம்
கழிதேனின் இதழ்களிலே ஒன்றுபட்டால்
கனல்கின்ற காமத்தை வென்றிடலாம்
வழிநடக்கக் காலிரண்டும் ஒன்றிபட்டால்
வளர்பாதை பயணத்தை வென்றிடலாம்
மொழியெதுகை மோனையுடன் ஒன்றுபட்டால்
மொழிகின்ற கவிதையினை வென்றிடலாம் !
ஓடுகின்ற நதிகளெல்லாம் ஒன்றுபட்டால்
ஓங்கார ஒலியெழுப்பும் ஆழியாகும்
போடுகின்ற கோடெல்லாம் ஒன்றுபட்டால்
பொலிகின்ற ஓவியமாய்க் காட்சிநல்கும்
நாடுகின்ற நிலம்நீரும் ஒன்றுபட்டால்
நல்வயலாய்ப் பயிர்செழித்து வளம்பெருகும்
கூடுகின்ற மனங்களாக ஒன்றுபட்டால்
குழிபறிக்கும் பகையெல்லாம் நட்பாகும் !
கல்லோடு கல்தன்னைச் சேர்த்துவைத்தால்
கண்கவரும் கட்டடமாய் நிமிர்ந்துநிற்கும்
புல்கூட நடைதடுக்கும் பிரிந்துநின்றால்
புலிகூட பின்வாங்கும் சேர்ந்தெதிர்த்தால்
வில்கூட அம்போடி ணைகின்றபோதே
வெற்றியினைப் பெறுவார்கள் வீரரெல்லாம்
சொல்கூட அசைகள்தாம் கூட்டுறவால்
செம்மொழியாய் பொருள்தந்து சுவைநல்கும் !
கதிரோடு கங்குல்தாம் ஒன்றுபட்டால்
காலந்தான் உருவாகி நடக்கும்ஞாலம்
உதிரிகளாய் நாமிங்கே தனித்திருந்தால்
உதவாத பதர்கூட நமையெதிர்க்கும்
எதிர்நிற்கும் தடைகளினை உடைத்தெறிய
எல்லோரும் சேர்தெழுந்தால் தூளாகும்
புதிதான சாதனைகள் நாம்படைக்க
புன்மையிலா ஒற்றுமைதான் களமாகும் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.