புலம்பல்
எதிர்ப்படும்
நபரிடமெல்லாம்
உதவி கேட்டழுகிறது
ஓர் கருத்த நிழல்.
இரக்க மனதுள்ள
மனிதர்கள்
அவரவர் தம்
நிழலைத் தருகிறார்கள்.
அக் கருத்த நிழலுக்கோ
கொடுத்த நிழல்
போதவில்லை
இருளே வேண்டுமென
கோரிக்கை வைக்கிறது.
இருளத் தொடங்கி விட்ட
பொழுதில்
ஆசுவாசமடைகிறது
கருத்த நிழல்.
விடிய ஆரம்பித்ததும்
பழைய கூக்குரலை
முன்மொழியத் தொடங்கிவிட்டது.
தற்போது
வழிமொழிய ஒருவரும்
முன் வரவில்லை.
தன்னை
ஆசுவாசப்படுத்திட
இருளும் வரை
காத்திருக்கத் தான் வேண்டும்
என்பதை இப்போது
முழுமையாய் உணர்ந்து விட்டது
அக்கருத்த நிழல்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.